நரசிம்ஹ மூர்த்தி ஆசையுடன் வசிக்கும் இடமாதலால் 'திருவேளுக்கை' என்ற பெயர் ஏற்பட்டது. வேள் - ஆசை, இருக்கை - இருப்பிடம். வேளிருக்கை என்பது மருவி வேளுக்கை என்று ஆனது.
மூலவர் அழகியசிங்கர், நரசிம்ஹர், என்னும் திருநாமங்களுடன் பத்மாசன திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவர் முகுந்த நாயகன். தாயாருக்கு வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி என்று இரண்டு திருநாமங்கள். பிருகு முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இந்த ஸ்தலத்து நரசிம்ஹர் 'காமாஸிகா நரசிம்ஹன்' என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றி ஸ்வாமி தேசிகன் 'காமாஸிகாஷ்டகம்' என்ற ஸ்லோகம் அருளியுள்ளார்.
பேயாழ்வார் 3 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 1 பாசுரமுமாக 4 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|